Equal Life Foundation, Bill of Rights (in Tamil)

Post Reply
User avatar
Anton
Posts: 351
Joined: 17 Jul 2011, 19:08

Equal Life Foundation, Bill of Rights (in Tamil)

Post by Anton »

http://equallifetamil.wordpress.com/

சம வாழ்வு அறக்கட்டளை (The Equal Life Foundation)
உரிமைக் காப்பு ஆவணம் (Bill of Rights)


சம வாழ்வு அறக்கட்டளை (The Equal Life Foundation) என்பது உலக சமுதாயத்தால், இந்த உலகத்தில் இருக்கும் பல்வேறு கலாச்சாரங்களைச் சேர்ந்த மனிதர்களை கொண்டு உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பு. இந்த உலகில் இருக்கும் எல்லா உயிர்களும், உயிர்வாழ்தல் என்பதைத் தவிர வாழ்க்கையின் மற்ற எல்லா அம்சங்களிலும் கூட சமமானவையே என்று ஒரு விழிப்புணர்வையும், புரிதலையும் ஏற்படுத்துவதே இந்த அமைப்பின் முக்கியக் குறிக்கோள்.

இந்த உலகத்தில் தோன்றியதினால் இயற்கையாக அமைந்த உரிமை தவிர எல்லா உயிர்களும் எல்லா விதத்திலும் எல்லாவற்றிலும் சம உரிமையை உடையவை. மனிதனால் உருவாக்கப்பட்ட கற்பனையான ஏற்றத்தாழ்வுகள், படிநிலைகள், மேல்தட்டு, கீழ்தட்டு பிரிவினைகள் மற்றும் மனிதனின் பிரித்துப் பார்க்கும் மனது இவைகளைத் தாண்டி ஒவ்வொரு உயிருக்குள்ளும் இருக்கும் வாழ்வாதாரமான ஜீவ சக்தி எல்லோருக்கும் சமமானதுதான் என்பது தான் இதன் அடிப்படைக் கொள்கை.

இயற்கையாக எல்லா உயிர்களுக்கும் அமைந்திருக்கும் உரிமை எல்லோருக்கும் – ஒருவர் விடாமல் – கிடைக்கவேண்டும் என்பதுதான் இந்த எல்லோருக்கும் சம உரிமை என்கிற மசோதா மூலம் இங்கு பிரகடனப் படுத்தப்படுகிறது. யாரோ ஒருவருக்கு மட்டும் கிடைக்கும் பிரத்யேக உரிமை இல்லை இது.

சம வாழ்வு அறக்கட்டளை, சம உரிமையுடன் கூடிய வாழ்வு என்பதை ஒவ்வொரு மனிதனுக்கும் இயற்கையாக அமைந்த, மாற்ற இயலாத உரிமையாக கருதுகிறது. இந்த உரிமையானது வாழ்வின் உயிர் மூச்சுடன் கலந்த ஒன்று. உயிர் வாழும் ஒவ்வொரு ஆணும், பெண்ணும் குழந்தையும் இதில் அடக்கம்.

1. பொருளாதார சம உரிமை : என்பது எல்லாவிதமான பணத் தேவைகளும் எல்லோருக்கும் அணுக முடிந்ததாகவும், கிடைக்கக்கூடியதாகவும் இருக்க காப்புறுதி கொடுப்பது. எல்லோருக்கும் அடிப்படையான ஆரோக்கியமான மனம் நிறைந்த வாழ்வு இதன் மூலம் கிடைக்கும் என்பதை புரிய வைத்து தெளிவுப்படுத்தப் பட வேண்டும்.

2. ஆரோக்கிய சம உரிமை: எல்லோருக்கும் உறுதியான உடலமைப்பும், ஜீவத்துவமும், தெளிவு, அறிவாற்றல், உணர்ச்சி சமநிலை இவை இணைந்த நல்வாழ்வை உறுதி செய்வது.

3. ஆபத்தின்மை, பாதுகாப்பு சம உரிமை: இவை இரண்டும் ஒவ்வொரு குழந்தைக்கும் கிடைக்க வேண்டும். இதனால் குழந்தைகளுக்கு பயமில்லாத, விபத்து இல்லாத, பாதுகாப்புடன் கூடிய வாழ்வு உறுதி செய்யப் படுகிறது. பெற்றோர்களின் வழிகாட்டுதலுடன் கூடிய வாழ்வு, கருத்து சுதந்திரம், மகிழ்ச்சியான, கற்பனைத் திறனை வளர்த்துக் கொள்ளக் கூடிய சூழல், இவை ஒவ்வொரு குழந்தைக்கும் அமைந்தால் தங்களின் திறமையை வெளிப்படுத்த முடியும். ஒவ்வொரு குழந்தையும் தனித் திறமையுடன் பிரத்யேகமான வாழ்வை வாழ முடியும்.

4. வீட்டுவசதி சம உரிமை: இந்த உரிமை ஒவ்வொரு மனிதனுக்கும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவர்களது சமூகத்திலேயே நிலையான வீட்டு சூழல் கிடைக்க ஆவன செய்கிறது. இதனால் போஷாக்கான வாழ்க்கை, வாழ்வுக்கு தேவையான ஆதாரம் இவை கிடைப்பதால் கண்ணியத்துடன், ஒருமைப்பாட்டுடன் வாழ வழி கிடைக்கிறது.

5. கல்வி சம உரிமை: இந்த உரிமை ஒவ்வொரு தனி மனிதனும் தன் சக்திக்கேற்ப மிகச் சிறந்ததை நாட்டத்துடன் தொடரவும் தன் திறனை முழுமைபடுத்திக் கொள்ளவும் வழி செய்கிறது. இதன் காரணமாக அறிவாற்றல் வளர்ச்சியும், செயல்முறை பயன்பாடுகளும் நிறைந்த ஒரு வாழ்வு கிடைக்கிறது. இதில் பங்கேற்பவர்கள் பூமியில் வாழும் தங்கள் வாழ்க்கையை பயனுள்ளதாக செய்து, மற்றவர்களின் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளவும் தங்கள் பங்களிப்பைக் கொடுக்கிறார்கள்.

6. நில சம உரிமை: ஒவ்வொரு மனிதனுக்கும் அவன் தேர்ந்தெடுக்கும் நிலத்தில் வாழ வகை செய்வது. அதனை வீடு என்று அழைக்கவும், அந்த மண்ணில் நடக்கவும், அந்த மண்ணிலிருந்து வாழ்க்கைக்குத் தேவையான போஷணையும், வாழ்வாதாரமும் பாதுகாப்பும் கிடைக்க வழிவகை செய்வது; விலங்குகளும், செடி கொடி தாவர வகைகளும் மனிதர்களுமாக கூடி ஒற்றுமையாக வாழும் இடமாக அது இருக்கும். எல்லா உயிரினங்களும் வாழ சம உரிமை பெற்றவை என்றும் எல்லா உயிர்களும் ஒன்றே என்றும் நிலை நிறுத்துவது.

7. சுதந்திர கூட்டமைப்பு சம உரிமை: இதன் மூலம் ஆற்றல் மிகுந்த, ஒருவருக்கொருவர் பரிமாற்றம் செய்து கொள்ளும், எந்தவிதமான கட்டுப் பாடுகளுமற்ற ஒரு சமூக பொருளாதாரச் சூழல் அமையும். இதனால் புதுப்புது யோசனைகள், கருத்தாக்கங்கள், தொழில்நுட்பங்கள், உற்பத்தித்திறன் ஆகியவை அதிகரிக்கவும், அபிவிருத்தி அடையவும் முடியும். இந்த மாதிரியான சுதந்திர கூட்டமைப்புக்கள் மனித அடிப்படை உரிமைகளை – சம உரிமை வாழ்வு - கட்டுப் படுத்த முடியாது என்பது புரிய வரும்

8. ஆராய்ச்சி, தொழில்நுட்ப சம உரிமை: விஞ்ஞானத்தில் புதிய முயற்சிகள், செயல்பாடு வெளியாக்கங்கள், இவற்றில் சம உரிமை. இவற்றின் பயன்பாடுகளை முதலில் பூமியின் சூழலை சரிசெய்யவும், சரிசமனம் செய்யவும், ஆகாயம், நதிகள், சமுத்திரங்களின் சூழலமைப்பை சரி படுத்தவும் உபயோகிப்பது. இதன் மூலம் நம் பூமியை அதன் ஆற்றல் மிகு சமநிலைக்குத் திரும்பக் கொண்டு வருதல். இதன் காரணமாக மேம்படுத்தப்பட்ட, ஒருமைப்பாடு உள்ள ஒரு உலக சமுதாயத்தை உருவாக்குதல்; வாழும் சூழலை மிகச் சிறந்ததாகச் செய்து மனித குலத்தின் ஒட்டு மொத்த வாழ்வை தரம் மிக்கதாகச் செய்வது.

9. இயற்கை வளங்களை அடைய சம உரிமை: இயற்கை மற்றும் பொருளாதார, விஞ்ஞான, அறிவாற்றல் ஆதாரங்களை எல்லோரும் அடைய உரிமை. இதனால் வாழ்வின் அடிப்படை கட்டுமானத் தொகுதிகள் நிலைத்து நிற்கும். இதன் மூலம் சுதந்திரமாக, தட்டுப்பாடற்று தான் விரும்பும் தொழில் வாழ்க்கையை தொடர என்னென்ன தேவையோ அதை செய்ய முடியும். இதனால் சமுதாயம் முன்னேறும். தொழில் நுட்பம், கண்டுபிடிப்புகள், புத்தாக்கங்கள் மேம்படும்.

10. அமைதி, வளம், சுபீட்சம் இவற்றில் சம உரிமை: தீங்கு அச்சுறுத்தல்கள், வன்முறைகள், அழித்தல் இல்லாத வாழ்வு; வாழ்க்கையை மிகச் சிறந்த பொக்கிஷமாகப் பாதுகாத்தல்; ஒவ்வொரு தேர்வும், ஒவ்வொரு நடவடிக்கையும், ஒவ்வொரு செயலும், ஒவ்வொரு எண்ணமும் மனித குலத்தின் நன்மைக்காகவே என்று இருத்தல்; மிகப் பெரிய மனித வாழ்க்கையை, ஒற்றுமையுடன் எல்லோருடைய வாழ்க்கையுடனும் இயைந்து வாழ்தல்.

11. சுய ஆட்சி சம உரிமை: சமுதாயத்தின் ஜீவ சக்தியை கட்டுபடுத்தும், பலவீனமடையச் செய்யும் செயற்கையான அரசாங்கத்தின் வெளிக் கட்டுபாடுகள் அற்ற ஒரு சுய ஆட்சி அமைய வேண்டும். இந்த சுய ஆட்சி சம உரிமை பரந்த சமுதாய அரசியலமைப்புடன் ஒன்றிணைந்து, இன்னும் மிகப்பெரிய முழுமையின் ஒருங்கிணைப்பை ஆதரிக்க வேண்டும். இதனால் உண்மையான மக்களாட்சி மலரும். இந்த மக்களாட்சியில் ஒவ்வொரு தனி மனிதனும் ஆதரிக்கப் பட்டு, தன் சம உரிமையை காப்பாற்றிக் கொள்ள இயலும். ஒவ்வொரு உரிமையும் சமுதாய, அரசியல் கட்டமைப்புக்களால் தீவிரமாகக் காப்பாற்றப்படும். இதனால் சமுதாய ஒருங்கிணைப்பு எப்போதும் பலவீனப்படாது.

12. சுதந்திரமான மனசாட்சி மற்றும் அறநெறி ஒருமைப்பாடு சம உரிமை: கட்டுபடுத்தப் பட்ட உளவியல், மற்றும் உணர்ச்சி பூர்வ விஷயங்களால் பாதிக்கப்படாத ஒரு வாழ்க்கையை ஊக்குவிக்க, தன்னைத்தானே சுதந்திரமாக வெளிபடுத்திக் கொள்ளும், ஒடுக்கப்பட்டுவிடுவோமோ, அல்லது பழிக்குப் பழி வாங்கிவிடுவார்களோ என்ற பயம் இல்லாமல், குறைகள் இல்லாத, வரையறை இல்லாத வாழ்க்கையை இந்த உரிமை கொடுக்கிறது.

13. பணவியல் ஒருமைப்பாட்டு சம உரிமை: பண்பு, சமுதாயத் தொகுதி ஆகியவற்றில் சரிசமநிலை ஏற்பட்டு, ஒரு அலகு என்பது ஒரு அளவீட்டீற்கு சமமாக இருக்க வேண்டும். இதனால் எந்த ஒரு மனிதனோ, நிறுவனமோ, அமைப்போ பணவியல் அல்லது பொருளாதார முறைமையை தங்கள் செல்வாக்கைப் பெருக்கிக் கொள்ள தவறாகக் கையாளமாட்டார்கள். இதன் காரணமாக ஒரு ஒருங்கிணைந்த, சரிசமனான, சம அமைப்பு உருவாகும். இவற்றால் வர்த்தகம், தொழில், பணப் புழக்கம், பணமதிப்பைத் தக்கவைத்துக் கொள்ளுதல் ஆகியவை பெருகவும், இவையே உலக பொருளாதார அமைப்பின் அடிப்படையாகவும் வாழ்க்கைக்கு உதவும்.

14. ஆன்மீக சரிசமநிலை சம உரிமை: எந்த சமயங்கள் எல்லோருக்கும் சம உரிமை என்பதை ஆதரிக்கிறதோ, வாழ்வாதாரங்கள் எல்லோருக்கும் சமம் என்கிறதோ, ஜீவத்துவம் நிறைந்திருக்கிறதோ, ஆன்மா என்பதை நம் ஒவ்வொருவரின் உள்வாங்கும் வெளிவிடும் மூச்சில் கலந்திருக்கும் உந்து சக்தியாக கருதுகிறதோ, வாழ்க்கையை முழுமையாக ஆதரிக்கிறதோ, எவற்றின் பிரிக்கப்படாத கொள்கைகள் எல்லோராலும் பின்பற்றப்படுகிறதோ, எவை எல்லோருக்கும் மிகச்சிறந்ததை சொல்லுகிறதோ, எங்கு மனிதனின் அடிப்படை உரிமையான எல்லோருக்கும் சம உரிமை என்பது மறைக்கவில்லையோ அதை இந்த உரிமை கோருகிறது.

15. வாழ்க்கையின் எல்லா சம உரிமை கொள்கைகளும் எல்லா உயிர்களுக்கும் அந்நியப்படுத்த முடியாத சில உரிமைகளை கோருகின்றது. அதாவது சுயமுடிவு செய்யும் உரிமை, வாழ்க்கையின் குறைந்தபட்ச அடிப்படை தேவைகள் கிடைக்கும் என்ற உறுதியை நிறைவு செய்ய தேவையான முறையான போஷாக்கு, உணவு, உடை, தங்களுக்கும் தங்கள் குடும்பங்களுக்கும் தேவையான வாழ்வாதாரங்களை அடையத் தேவையான ஏற்புத் திறன்களை பெற்று, அவைகளை தங்கள் சமுதாய, பொருளாதார, குடும்ப, இன, கலாச்சார, தேசிய, உலகளாவிய உறவுகளில் ஒன்றிணைத்து எல்லோரும் சமமானவர்களே என்று பிரகடனப் படுத்தி எல்லோருக்கும் சம வாழ்க்கை என்பது ஒன்றே அடிப்படை சம உரிமை என்று கோருகிறது.

16. நம் எதிர்கால சந்ததியினருக்கு மாசற்ற, நோய்களற்ற, பசி, வன்முறை, அழித்தல் இல்லாத ஒரு வாழ்விடத்தை கொடுக்க வேண்டும். இதனால் இந்தப் பூவுலகில் உயிர் வாழ்க்கை நீடித்து, செழித்தோங்கி, இன்றைக்கு மட்டுமில்லாமல் என்றென்றைக்கும் நித்தியமாக வாழ்வாங்கு வாழ்ந்திருக்கும்.
Post Reply

Return to “Equal Life Foundation”